சென்னையில் 104 சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவு - மாநகராட்சி நிர்வாகம் தகவல்

1,651 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் குடியிருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான உள்ளடக்கிய மற்றும் நன்கு பராமரிக்கப்படும் சுற்றுப்புறங்களை உறுதி செய்யவும், தொடர்ச்சியான உள்கட்டமைப்பு மற்றும் குடிமை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 74 குடியிருப்புப் பகுதிகளில் ரூ.15.11 கோடி மதிப்பீட்டில் 15,039 மீட்டர் நீளமுள்ள 37 தார்ச்சாலைகள், 11 பேவர் பிளாக் சாலைகள், 56 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 104 சாலைகளை உள்ளடக்கிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் 33 தார்ச்சாலைகள், 11 பேவர் பிளாக் சாலைகள் மற்றும் 37 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் என 81 சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. சேதடைந்த சாலைகளை சீரமைத்தல், நடைபாதைகளை வலுப்படுத்துதல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிறந்த அணுகலை உறுதி செய்வதற்காக சரியான சாய்வுகளை வழங்குதல் ஆகியவை இந்தப் பணிகளில் அடங்கும்.
மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்த 37 குழந்தைகள் மையங்கள், 15 நியாய விலைக் கடைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு அம்மா உணவகம் மற்றும் சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றில் ரூ.13.33 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 9 பூங்காக்கள் மற்றும் 2 விளையாட்டு மைதானங்கள் ரூ.98.99 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, தெருவிளக்குகள் அமைக்கப்படாத இடங்கள் மற்றும் அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்கள் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் 123 எண்ணிக்கையான குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் 1,476 எண்ணிக்கையிலான விளக்கு கம்பங்கள், 9 எண்ணிக்கையிலான உயர் கோபுர மின்விளக்குகள் மற்றும் 2,782 எண்ணிக்கையிலான எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் 48 எண்ணிக்கையிலான நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியில் 964 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்கள், 7 எண்ணிக்கையிலான உயர்கோபுர விளக்குகள் மற்றும் 1,651 எண்ணிக்கையிலான எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மீதமுள்ள 75 குடியிருப்புப் பகுதிகளில் 512 எண்ணிக்கையிலான மின்விளக்கு கம்பங்கள், 2 எண்ணிக்கையிலான உயர்கோபுர விளக்குகள் மற்றும் 1,131 எண்ணிக்கையிலான எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், ரூ.32.45 கோடி மதிப்பில் 173 குடியிருப்புப் பகுதிகளில் 1,22,014 குடியிருப்புகள் பயனடையும் வகையில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1,325 தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். 406 குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. குப்பை சேகரிப்பு, கழிவுகளை திறம்பட அகற்றுதல் மற்றும் தூய்மையான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சாலைகள், பொது வசதிகள், விளக்குகள் மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மக்களின் முழுமையான வளர்ச்சிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி தனது மேம்பட்ட சேவையினை வழங்கி வருகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






