ஆபாச வீடியோ விவகாரம்; போலீஸ் டி.ஜி.பி பணி நீக்கமா? கர்நாடக மந்திரி பதில்

வீடியோ விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவை பணி நீக்கம் செய்ய முடியும் என்று மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சர்ச்சை வீடியோ வெளியானதை அடுத்து போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். விசாரணைக்கு பிறகு என்ன விஷயங்கள் நடந்தது என்பது தெரியவரும். அதன்பிறகு அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை பணி நீக்கம் செய்ய முடியும். அவர் என்னை சந்திக்க எனது வீட்டுக்கு வந்தார். அவரை சந்திக்க நான் மறுத்துவிட்டேன். இத்தகைய சூழலில் அவரை சந்தித்தால் அது சரியாக இருக்காது. இதுபோன்ற நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு எந்த தயக்கமும் காட்டவில்லை.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அவரை தற்போது பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அவர் மீதான புகார் பற்றி எனக்கு தெரியாது. முதல்கட்ட தகவல்களை தவிர வேறு எந்த விஷயமும் எனக்கு தெரியாது. இந்த விவகாரம் போலீஸ் துறைக்கு இக்கட்டான நிலையை உண்டாக்கியுள்ளது. இதுபோன்ற செயல்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு மட்டுமின்றி பிற துறைகளுக்கும் வெட்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் முதல்-மந்திரி சித்தராமையா மிகுந்த வேதனை அடைந்துள்ளார். எனது துறை என்பதால் இது எனக்கும் நல்ல விஷயம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.






