அசாமில் மீண்டும் வன்முறை: செல்போன், இணையதள சேவை துண்டிப்பு

Photo Credit: ANI
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கவுகாத்தி,
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த 3 பேர் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் ஆதிவாசி ஒருவர் மீது மோதியதால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்களை ஆதிவாசிகள் தாக்கினர். மேலும், அவர்களது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
சில வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு கும்பல் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அரசு அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். இணையதளம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் கோக்ரஜார் மாவட்டத்தில் இணையதளம் மற்றும் செல்போன் சேவை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.






