அமீரக அதிபர் இன்று இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்

டெல்லி விமான நிலையத்தில் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு முப்படை ராணுவ மரியாதை அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக இன்று (திங்கட்கிழமை) வருகிறார். சமீபத்தில் அமீரகம் சென்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிடம் பிரதமர் மோடியின் அழைப்பை வழங்கினார்.
அந்த அழைப்பை ஏற்று இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருடன் அமீரகத்தின் பல மந்திரிகள், மூத்த அதிகாரிகள், உயர் மட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசுக்குழுவினர் இதில் பங்கேற்கின்றனர். இந்த குழுவுடன் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டலும் வருகிறார். டெல்லி விமான நிலையத்தில் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு முப்படை ராணுவ மரியாதை அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் இருதரப்பு ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பின்னர், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்கிறார். இந்த பயணத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய மந்திரி குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.






