சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் இந்து - முஸ்லிம் பிரார்த்தனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் இந்து - முஸ்லிம் பிரார்த்தனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x

இரு சமூகத்தினரும் போஜ்ஷாலா வளாகத்தில் வழிபாடுகளை நடத்த உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் நகரில் போஜ்ஷாலா (போஜசாலை) என்ற வளாகம் உள்ளது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னமான இந்த வளாகம், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த வளாகம் தங்களது வழிபாட்டு தலம் என இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர். போஜ்ஷாலா வளாகம் இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் வழிபாட்டுத் தலம் என்று இந்து மதத்தினரும், அது, மவுலா மசூதி என்று இஸ்லாமிய மதத்தினரும் கூறுகின்றனர்.

இங்கு வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதையடுத்து, மோதலை தணித்து இரு தரப்பும் சுமுகமாக வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாட்டை தொல்லியல் துறை செய்தது. அதாவது, போஜ்ஷாலா கட்டடத்தில் இந்து மதத்தினர் செவ்வாய்க்கிழமை பூஜை செய்து வழிபடலாம் என்றும், இஸ்லாமிய மதத்தினர் வெள்ளிக்கிழமை தொழுகை செய்யலாம் என்றும் உத்தரவிட்டது. அதன்படி இரு தரப்பினரும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாளை (23.1.2026) வசந்த பஞ்சமியை முன்னிட்டு நாள் முழுவதும் போஜ்சாலா வளாகத்தில் சரஸ்வதி பூஜை செய்து வழிபடுவதற்கு அனுமதிக்ககோரி இந்து அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், நாளை வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை தொழுகை நடத்த ஒப்புதல் கோரி முஸ்லிம் சமூகம் சார்பில் ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறும் என்றும், நாள் முழுவதும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பின் வழக்கறிஞர் வாதிட்டார். மசூதி கமிட்டியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு அவர்கள் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “ஜனவரி 23, சரஸ்வதி பூஜை விழாவானது வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் நாளில் வருவதால் இந்து மற்றும் முஸ்லிம் பக்தர்கள் இருவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்” என உத்தரவிட்டனர்.

“மதியம் 1 மணி முதல் 3 மணிக்குள் தொழுகைக்காக, அதே வளாகத்திற்குள் தனி நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுடன் கூடிய பிரத்யேகமான தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒரு நியாயமான யோசனை முன்வைக்கப்பட்டது, இதன் மூலம் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற முடியும்.

அதேபோல், வசந்த பஞ்சமி அன்று பாரம்பரிய பூஜைகளை செய்வதற்காக இந்து சமூகத்தினருக்கும் ஒரு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் வழிபடும் வகையில், சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யவேண்டும்” என்று நிதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி போஜ்ஷாலா வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, போஜ்ஷாலா கட்டடத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக அறிவியல்பூர்வ ஆய்வு செய்யும்படி மார்ச் 2024இல் மத்தியப் பிரதேச ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

தொல்லியல்துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு தொடர்பான அறிக்கையானது சிலிடப்பட்ட கவரில் வைத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதன் நகலை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஐகோர்ட் வழங்கவேண்டும், அவர்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

“ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ரிட் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, சம்பந்தப்பட்ட தரப்பினர் அந்த இடத்தில் தற்போதைய நிலையை கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story