பிரதமர் மோடி அசாம் பயணம்; ரூ.6,950 கோடி மதிப்பிலான திட்டத்தின் பூமி பூஜையில் பங்கேற்பு

23 மாவட்டங்களை சேர்ந்த போடோ சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடுவர்.
கவுகாத்தி,
பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதில், பூமி பூஜை, போடோ சமூக நடன நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று அசாமுக்கு புறப்பட்டு செல்வார்.
அவர் இன்று மாலை 6 மணியளவில் கவுகாத்தியில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெறும் பாரம்பரியமிக்க போடோ கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். போடோ சமூகத்தின் பாரம்பரிய செறிவை கொண்டாடும் வகையில், 23 மாவட்டங்களை சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடுவர்.
இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆடும், தனித்துவ நாட்டுப்புற நடனம் என்ற பெருமையை பகுரும்பா நடனம் பெற்றுள்ளது. இது மிக பெரிய கலாசார நிகழ்ச்சியாக இருக்கும்.
இதன்பின்னர் நாளை காலை 11 மணியளவில் கலியாபோர் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, ரூ.6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தட திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள இருக்கிறார்.
86 கி.மீ. நீளம் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் ஒன்றாக கலியாபோர் மற்றும் நுமலிகார் பிரிவுக்கு இடையே இது அமையும். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.






