ஜெர்மன் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட அளவிலான ஆலோசனை

வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் உள்ள ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மறுஆய்வு செய்தனர்.
ஆமதாபாத்,
ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற பின் ஆசிய நாடுகளுக்கு மெர்ஸ் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் இருவரும் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று காலை சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் இருவரும், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைத்து பட்டம் விட்டும் மகிழ்ந்தனர்.
இதன்பின் இரு தலைவர்களும் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கூட்ட அரங்கில், சமீபத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய-ஜெர்மனி மூலோபாய நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குறித்து மறுஆய்வு செய்தனர்.
இதன்பின்னர், இதே கூட்ட அரங்கில் இரு தலைவர்களும், தங்களுடைய உயர்மட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இரு தலைவர்களும் தற்போது நடந்து வரும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் உள்ள ஒத்துழைப்பை மறுஆய்வு செய்தனர்.
ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார துறைக்கான செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.






