ஆபாச வீடியோ வழக்கு; சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் விடுவிப்பு ரத்து

பூபேஷ் பாகல் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
புதுடெல்லி,
சத்தீஷ்காரில் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியின்போது, அப்போதைய பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த ராஜேஷ் முனாத் தொடர்பான ஆபாச வீடியோ அடங்கிய சி.டி.க்கள் பணம் பறிக்கும் நோக்கில் வினியோகிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ராஜேஷ் முனாத் அளித்த புகாரின்பேரில், மாநில போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரசை சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இருந்து பூபேஷ் பாகலை விடுவித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, அந்த விடுவிப்பு உத்தரவை நேற்று அதிரடியாக ரத்து செய்தது. இதன் மூலம் பூபேஷ் பாகல் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது






