பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக இன்று பதவி ஏற்கிறார் நிதின் நபின்


பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக இன்று  பதவி ஏற்கிறார் நிதின் நபின்
x

கோப்புப்படம்

பா.ஜ.க. தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிதின் நபினுக்கு ஆதரவாக 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

புதுடெல்லி,

பா.ஜ.க.வின் முதல் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். அவரைத் தொடர்ந்து எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, அமித்ஷா என பலர் தேசிய தலைவர் பதவியை அலங்கரித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் தேசிய தலைவராக இருந்துள்ளார்.

பா.ஜனதா தேசிய தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். தற்போது தலைவராக உள்ள ஜே.பி.நட்டா கடந்த 2019-ம் ஆண்டு செயல் தலைவராக பொறுப்பேற்று 2020-ம் ஆண்டு தலைவர் ஆனார். அவரது முதல் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து தலைவர் பதவியை வகித்தார். இப்படியே சுழற்சி முறையில் தொடர்ச்சியாக 2 முறை பதவி வகித்து விட்டார். இதற்கிடையே புதிய தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செயல் தலைவராக பீகார் மாநில எம்.எல்.ஏ. நிதின் நபின் நியமிக்கப்பட்டார். இவரும், ஜே.பி.நட்டா ஆகியோர் மட்டுமே செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 3 ஆண்டுகள் என்ற சுழற்சி முறையில், பா.ஜனதா மாநில தலைவர்கள் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலை தேர்தல் நடத்தும் அதிகாரியான கே.லட்சுமண் கடந்த 16-ந்தேதி அறிவித்தார்.

அதன்படி 19-ந்தேதி (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், 20-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. காலை முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 36 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் நாடாளுமன்ற பா.ஜனதா கட்சி சார்பில் ஒரு வேட்பு மனு என மொத்தம் 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வேட்பு மனுக்களுமே நிதின் நபினுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டன. ஒவ்வொரு மனுவிலும் 20 முன்மொழிபவர்களின் கையெழுத்துகள் இருந்தன.

தமிழக பா.ஜனதா சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட வேட்பு மனு மற்றும் முன்மொழிவு கடிதத்தை மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சரத்குமார், துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், குஷ்பு உள்பட பலர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற பா.ஜனதா கட்சி வேட்புமனுவில் பிரதமர் மோடி, முதன்மை முன்மொழிபவராக கையெழுத்து இட்டிருந்தார். இந்த வேட்புமனுவை நிதின் நபினுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா, நிதின் கட்காரி ஆகியோர் வழங்கினர்.

இந்த வேட்புமனு தாக்கலையொட்டி அனைத்து மாநில பா.ஜனதாவினரும் கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். மாலை 4 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்ததும் அவை பரிசீலிக்கப்பட்டன. நிதின் நபினுக்கு போட்டியாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேசிய தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

இதற்கான முறையான அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிகிறது. இதைமுன்னிட்டு பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு பா.ஜனதா அலுவலகம் வருகிறார். அவரது முன்னிலையில் நிதின் நபின் தேசிய தலைவராக அறிவிக்கப்படுகிறார். அதனைத்தொடர்ந்து பதவியேற்பு நடைபெறும் என தெரிகிறது. நிதின் நபின், பா.ஜனதாவின் தலைவர்கள் வரிசையில் 12-வது தலைவர் என்பதும், சுழற்சி முறை வரிசையில் 15-வது தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story