எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது: பிரதமர் மோடி புகழாரம்

சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், தனித்துவம் வாய்ந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு சிறப்பானது. தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. நம்முடைய சமூகத்திற்கான அவருடைய தொலைநோக்கு பார்வையை உண்மையாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, அவர் வெளியிட்ட வீடியோவில், திரைப்பட திரையில் இருந்து அரசியல் மேடை வரை மக்கள் இதயங்களில் ஆட்சி செய்தார். அவருடைய வாழ்க்கை, அவருடைய முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஏழைகளுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக அவர் அயராது உழைத்தார்.
பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் லட்சியங்களை நிறைவேற்ற இன்று நாம் அனைவரும் பாடுபடுகிறோம். அவர் தரமான கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்காக பாடுபட்டார் என தெரிவித்து உள்ளார். அதனால்தான் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர்.
அதனால்தான் இன்றும் கூட சமூகத்தின் ஏழை பிரிவினர் அவரை தங்கள் மிகச்சிறந்த தலைவர் என அழைக்கிறார்கள். பாரத ரத்னா எம்.ஜி.ஆருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.






