ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; கேரள நபர் தற்கொலை

ஓடும் பஸ்சில் தீபக் அருகே நின்றவாறு முஸ்தபா வீடியோ எடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பஸ்சில் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பஸ்சில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண் யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் யூடியூபர் பயணம் செய்துள்ளார். ஷிம்ஜிதா முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஆவார். அக்கட்சி சார்பில் அவர் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில், கூட்டம் அதிகமாக இருந்த பஸ்சில் பயணம் செய்தபோது தீபக்கும், ஷிம்ஜிதா முஸ்தபாவும் அருகருகே நின்றுள்ளனர். அப்போது, தீபக் தன்னை தொட்டு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா முஸ்தபா குற்றஞ்சாட்டி வீடியோ எடுத்துள்ளார். ஓடும் பஸ்சில் தீபக் அருகே நின்றவாறு முஸ்தபா வீடியோ எடுத்துள்ளார். மேலும், இந்த வீடியோவை சனிக்கிழமை தனது யூடியூப் பக்கத்தில் ஷிம்ஜிதா முஸ்தபா பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் யூடியூபர் ஷிம்ஜிதா தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டது தீபக்கிற்கு தெரியவந்துள்ளது. ஷிம்ஜிதா தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தீபக் சனிக்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தீபக்கின் அறை வெகுநேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அண்டை வீட்டார் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு தீபக் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, தீபக் மீது பாலியல் தொல்லை குற்றஞ்சாட்டி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா தற்போது அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது






