கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை.
புதுடெல்லி,
கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானின் இருப்பிடமாக இந்துக்களால் கருதப்படும் கைலாஷ் மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரையாகும்.
கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா தங்கள் ராணுவ படைகளை எல்லையில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து திரும்ப பெற்றதை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது.
இதன்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடப்பாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தலா 50 யாத்ரீகர்களை கொண்ட 5 குழுக்கள் உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும், 10 குழுக்கள் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை kmy.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கணினி செயல்முறை மூலம் யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.