வான்வெளியை மூடிய ஈரான்: அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான இந்திய விமான சேவை பாதிப்பு

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க், நியூவார்க் நகரங்கள் மற்றும் மும்பையில் இருந்து நியூயார்க் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உள்நாட்டு போராட்டம் மற்றும் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரான் அரசு தன்னுடைய வான்வெளியை மூடியுள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கான இந்திய விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவுக்கான 3 விமானங்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இதன்படி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க், நியூவார்க் நகரங்களுக்கான 2 விமானங்கள் மற்றும் மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கான விமானம் ஒன்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று ஐரோப்பாவுக்கான சில விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. ஈரான் வான் பகுதியில் பறக்க கூடிய விமானங்கள், நம்முடைய பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வேற்று பாதையில் செல்கின்றன. அதனால், விமானங்கள் காலதாமதத்துடன் சென்று சேரும் என பயணிகளுக்கு தெரிவித்து இருக்கிறது.






