நானும் இந்திய குடிமகன்தான்... நீண்டகால விசா அட்டையை எடுத்து காண்பித்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர்


நானும் இந்திய குடிமகன்தான்... நீண்டகால விசா அட்டையை எடுத்து காண்பித்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர்
x

ஐரோப்பிய கவுன்சில் தலைவர், தன்னிடம் உள்ள ஓ.சி.ஐ. எனப்படும் நீண்டகால விசா அட்டையை எடுத்து உயர்த்தி காட்டினார்.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களுக்கு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி இன்று விருந்து அளித்து கவுரவப்படுத்தினார். இதனையடுத்து டெல்லியில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தங்களுடைய குழுவினருடன் இன்று மதியம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை முக்கிய இடம் பெற்றது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் நமது நட்பு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் அமையும்.

இந்த நிலையில், அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து இன்று அறிவித்து உள்ளது.

இதன்பின்னர் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, நாங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளை இன்று நிறைவு செய்துள்ளோம்.

உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் தங்களுடைய குடிமக்கள் வலுவான பலன்களை பெறுவதற்கான பணிகளை நாங்கள் செய்திருக்கிறோம். அமைதி, நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றம் ஆகியற்றை மையப்படுத்தி, உலகளாவிய நிலை மீட்சியடைவதற்கான வடிவை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

அவர் தொடர்ந்து, நான் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருக்கிறேன். ஆனால், நான் வெளிநாடுவாழ் இந்திய குடிமகனும் ஆவேன். நீங்கள் நினைப்பதுபோல், இது எனக்கு சிறப்பு வாய்ந்த தருணம். என்னுடைய தந்தையின் குடும்பத்தினர் கோவாவில் இருந்து வந்தவர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என கூறினார்.

அதற்கு சான்றாக, தன்னிடம் உள்ள ஓ.சி.ஐ. எனப்படும் நீண்டகால விசா அட்டையை எடுத்து உயர்த்தி காட்டினார். இந்த விசாவை வைத்திருப்போர், தனியாக விசாக்கள் எதுவுமின்றி இந்தியாவுக்கு எளிதில், பலமுறை பயணிக்க முடியும்.

அவர் தொடர்ந்து பேசும்போது, ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பிணைப்பு, தனிப்பட்ட முறையில் உணர்வுபூர்வம் வாய்ந்தது என்றார். ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் பகிரப்பட்ட வளம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி இணைந்து பணியாற்ற வேண்டியதும் அவசியம் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

1 More update

Next Story