2 நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் மெர்ஸ் இன்று இந்தியா வருகிறார்

ராணுவ ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமதாபாத்,
ஜெர்மனியின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பிரெட்ரிக் மெர்ஸ் பொறுப்பேற்றார். இவர் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். அதிபராக பொறுப்பேற்றபின் ஆசிய நாடுகளுக்கு செல்லும் முதல் பயணமாகும்.
குஜராத்தின் ஆமதாபாத்துக்கு வரும் ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் புகழ்பெற்ற ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா'வை இருவரும் இணைந்து பார்வையிட உள்ளனர்.
இதனை தொடர்ந்து காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அப்போது சுமார் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் ராணுவ ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், முதலீடு, பசுமை எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய ஒத்துழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு சென்று ஜெர்மனி நிறுவனங்களை பார்வையிட இருக்கின்றனர்.






