ஆந்திராவில் சொகுசு பேருந்தில் தீ: 3 பேர் உயிரிழப்பு

தீ அணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்
நெல்லூர்,
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். நெல்லூரில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.
லாரி மீது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக நந்தியால் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீ அணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எனினும், இரு வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.






