ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
x

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ரமேஷ் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சவுடய்யா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 21). இவர், ஜமகண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். ரமேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருந்தார். இதற்காக தனக்கு தெரிந்த நபர்களிடம் ரமேஷ் கடனும் வாங்கி இருந்தார்.

இதுபற்றி ரமேசின் தந்தைக்கு தெரியவந்தது. உடனே மகன் வாங்கிய கடனை ரமேசின் தந்தை அடைத்திருந்தார். இவ்வாறு 2 முறை ரமேஷ் வாங்கிய கடனை அவரது தந்தை அடைத்திருந்தார். ஆனாலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை நிறுத்தாமல் ரமேஷ் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரமேஷ் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய போது ரமேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜமகண்டி போலீசார் விரைந்து வந்து மாணவர் ரமேஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததுடன், இதற்காக கடனும் வாங்கியதால், சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தந்தை கண்டித்து இருந்தார். இதன் காரணமாக மனம் உடைந்த ரமேஷ் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜமகண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story