பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை மறுநாள் நடைபெறுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்


பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை மறுநாள் நடைபெறுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்
x

கோப்புப்படம்

இந்த கூட்டத்தில், கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை மறுநாள் (ஜன., 27ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

கூட்டத்தொடரையொட்டி 28-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 9-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. ஜனாதிபதி உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகிய நிகழ்வுகளையொட்டி அன்றைய தினம் நேரமில்லா நேரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு, அவை நடவடிக்கைகள் குறித்தும், முக்கியமான தேசிய பிரச்சினைகள் பற்றியும் அனைத்துக் கட்சிகளை அழைத்து ஆளுங்கட்சி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தை வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிகிறது. நாடாளுமன்ற வட்டாரங்கள் இதனை தெரிவித்து உள்ளன.

1 More update

Next Story