மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புமா? தீவிர ஆலோசனை நடத்திய அமித்ஷா

மணிப்பூரின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எல்லையில் வேலி அமைக்கும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
புதுடெல்லி,
மணிப்பூரில் கடந்த மாதம் 13-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மணிப்பூரின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை பணியக இயக்குனர் தபன் டேகா மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
.மணிப்பூரில் கலவரத்துக்கு முந்தைய இயல்புநிலையை மீண்டும் கொண்டு வருவது குறித்தும், பல்வேறு ஆயுத குழுக்களிடம் உள்ள சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை திரும்பப் பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மணிப்பூரில் நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதற்கு மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இது தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, மார்ச் 8-ந் தேதி முதல் மணிப்பூரின் அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், சாலைகளில் இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மணிப்பூரின் சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட நுழைவுப் புள்ளிகளின் இருபுறமும் வேலி அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமித்ஷா, மணிப்பூரை போதையில்லா மாநிலமாக்க போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் என்று கூறினார்.
அமைதி திரும்புமா?
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலாகியிருக்கும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் அங்கு அமைதி திரும்புமா? மணிப்பூர் மக்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.