எது கடித்தது என தெரியவில்லை... 3 பாம்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபரால் பரபரப்பு

இது போன்ற பாம்புகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவது ஆபத்தானது என வாலிபரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினார்.
பாட்னா,
பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் கவுதம் குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தங்களது வீட்டிற்குள் பாம்புகள் புகுந்துவிட்டதாக கவுதம் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கவுதம்குமார் அவரது வீட்டில் இருந்த 3 நாகப் பாம்புகளை லாவகமாக பிடித்து காட்டில் விடுவதற்காக எடுத்துச் சென்றார். அப்போது 3 பாம்புகளில் ஒரு பாம்பு கவுதம் குமாரை கடித்துவிட்டது. தன்னைக் கடித்தது எந்த பாம்பு என்று தெரியாததால் 3 பாம்புகளுடன் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
3 நாகப்பாம்புகளுடன் ஒருவர் சிகிச்சைக்கு வந்ததை கண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். நடந்த சம்பவங்களை டாக்டர்களிடம் கவுதம் குமார் விளக்கினார்.
இது குறித்து டாக்டர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு வந்து பாம்புகளை மீட்டு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் கவுதம் குமாருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர். பாம்பு கடித்தால் விரைவாக உடல் முழுவதும் விஷம் பரவும் என்று தெரிந்தும் கவுதம் குமார் கவலைப்பட வில்லை.
டாக்டர்கள் அவரிடம் இது போன்ற பாம்புகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவது ஆபத்தானது போட்டோ எடுத்து வந்தால் எந்த வகையான பாம்பு என அறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






