சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கணுமா..? இந்த பழக்கங்களை எல்லாம் மாத்துங்க..!

சிறுநீரகங்களை நீண்ட ஆயுளுடன் பாதுகாக்க குறிப்பிட்ட இடைவெளியில் நீரிழிவு, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.
உடலில் சேரும் நச்சுகளை வடிகட்டவும், திரவங்களை சமநிலைப்படுத்தி நீரேற்றத்தை கண்காணிக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் சிறுநீரகங்கள் 24 மணி நேரமும் உழைக்கின்றன. அந்த அளவுக்கு மிகவும் கடினமாக உழைக்கும் சில உறுப்புகளில் ஒன்றாக விளங்கும் இவை தினமும் சுமார் 200 லிட்டர் ரத்தத்தை வடிகட்டும் பணியையும் செய்கின்றன. அதனை கருத்தில் கொள்ளாமல் அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை கொடுத்து, நோய் பாதிப்பையும் உண்டாக்குகின்றன. அவை என்னென்ன என்பது பற்றியும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
குறைவாக தண்ணீர் குடிப்பது
மிக குறைவாக தண்ணீர் குடிப்பது நீரிழப்புக்கு வித்திடும். அதனால் நச்சுக்களை வடிகட்டும் சிறுநீரகங்களின் செயல்பாடு கடும் பாதிப்புக்குள்ளாகிறது. உடல் தொடர்ந்து நீரிழப்புக்குள்ளானால் சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும். நாள் முழுவதும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது. வெப்பமான சூழல் கொண்ட இடத்தில் வாழ்ந்தாலோ, சுறுசுறுப்பான, கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலோ தண்ணீர் பருகும் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
வலி நிவாரணிகள்
முதுகு வலி, தசை வலி உள்ளிட்ட உடல் வலிகள், மூட்டு வலி, பல் வலி, தலை வலி, மாதவிடாய் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அடிக்கடியோ, அதிகமாகவோ மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணிகளை (மாத்திரைகளை) பயன்படுத்துவது சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்கக்கூடும்.
வலி நிவாரணிகள் தற்காலிகமாக வலியை குறைக்கலாம். ஆனால் சிறுநீரக திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அவசர, அவசிய தேவையின்போது மட்டுமே அவற்றை பயன்படுத்த வேண்டும்.
உப்பு அதிகம் சேர்த்தல்
உண்ணும் உணவு, உணவு பதார்த்தங்கள், பலகாரங்களில் அதிகப்படியான உப்பு கலந்திருப்பது சிறுநீரகங்களை கடினமாக உழைக்கச் செய்துவிடும். ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி விடும். இவையே சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாகும். அதிலும் உப்பு பயன்பாடு மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடும். மூலிகைகள், மசாலா பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
பரிசோதனை செய்யாமல் இருத்தல்
நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இவை இரண்டும் சிறுநீரகங்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. சிறுநீரகங்களை நீண்ட ஆயுளுடன் பாதுகாக்க குறிப்பிட்ட இடைவெளியில் நீரிழிவு, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.
சிறுநீரை அடக்குதல்
சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை சீர்குலைத்து விடும். இதே பழக்கம் தொடர்ந்தால் சிறுநீரக கற்களோ, சிறுநீரக தொற்றோ ஏற்படக்கூடும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகம் தேங்குவதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
புரத உணவுகள்
உடல் தசைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு புரதம் மிக முக்கியமானது. அதேவேளையில் அதிக புரதம் உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து பெறப்படும் புரதம் நாளடைவில் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றில் இருந்து கிடைக்கும் புரதத்தை அதிகம் உட்கொள்வதே சிறந்தது.
தூக்கமின்மை
தூக்கமின்மையால் அவதிப்படுவது சிறுநீரக செயல்பாட்டையும், ஹார்மோன் ஒழுங்கு முறையையும் சீர்குலைக்கும். சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு இரவில் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்குவது நல்லது. புகைப்பழக்கமும் கூடாது. புகைப்பிடிப்பது சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைத்து சிறுநீரக நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.






