வியர்க்குருவை விரட்ட 10 எளிய வழிமுறைகள்


வியர்க்குருவை விரட்ட 10 எளிய வழிமுறைகள்
x

வெயில் காலத்திற்கும், வியர்க்குரு காலத்துக்கும் பழங்களை அதிகமாக உண்பதே மிகச்சிறந்த நிவாரணம் ஆகும்.

சிலருக்கு உடம்பெல்லாம் வியர்க்குரு ஏற்பட்டு கடுமையான தொந்தரவு கொடுக்கும். உடலிலுள்ள தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாகத் தோன்றி, சொரிந்தால் எரிச்சலையும், வலியையும், அரிப்பையும் கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கும்.

தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வியர்வை வரும் வேலைகளைச் செய்வது, இறுக்கமான ஆடைகளை அணிவது, புழுக்கமான, காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது போன்றவை வியர்க்குருவை உண்டாக்கும் சில காரணங்களாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் இந்த வியர்க்குரு, கோடைகாலத்தில் அநேகம் பேருக்கு ஏற்படும் பிரச்சினை ஆகும். உடலில் வந்த வியர்க்குரு நிறைய பேருக்கு எந்தவித சிகிச்சையுமின்றி தானாகவே மறைந்துவிடும். சில பேருக்கு எரிச்சலையும் அசௌகரியத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணும்.

’கொட்டும் புதுமழையில் கொஞ்ச நேரம் , சொட்டச் சொட்ட நனைந்தாலே, உடலிலுள்ள வியர்க்குரு முழுவதும் கொட்டிவிடும்“ என்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள்.

வெயில் காலத்திற்கும், வியர்க்குரு காலத்துக்கும் மிகச்சிறந்தவை பழங்களை அதிகமாக உண்பதே.

1). இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்றவை வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவும்.

2). கிராமத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பனை நுங்கு மிகமிகச் சிறந்த மருந்து. அதிக அளவில் இதை சாப்பிடலாம்.

3). வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றுமே வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினி மருந்து. இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து, மையாக அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்கள் முழுவதிலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து, சுமார் 1 மணி நேரம் ஊற விட்டு, பின் குளிக்கவேண்டும்.

4). வெறும் சந்தனத்தைக்கூட இம்மாதிரி உடலெங்கும் தேய்த்துக் கொள்ளலாம்.

5). வெயில் காலத்தில், வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

6). முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

7). பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவேண்டும்.

8). கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

9). ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு, வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால், எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.

10). காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகவேண்டும்.

-டாக்டர் எஸ். அமுதகுமார்.

1 More update

Next Story