வீட்டிலுள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்தலாமா?

ஒரு சோப்புக் கட்டியை பலர் உபயோகப்படுத்தும்போது, நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவ வாய்ப்பு அதிகம்.
அந்த காலத்தில் ஒரு சோப்பை வீட்டிலுள்ள அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் அப்பொழுது நினைத்ததில்லை. ஆனால், இப்பொழுது பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுவிட்டது. அதனால், குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களுக்குப் பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதே.
பலவிதமான சரும அமைப்புகள் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். இப்படியிருக்கும்போது, ஒரே சோப்பை பலர் உபயோகிப்பதால், தீமைதான் அதிகமே தவிர, நன்மை இல்லை.
பாத்ரூமில் பலர் சோப்பை உபயோகித்தபின் அதன் மீது நிற்கும் நுரையைக் கழுவாமல் சோப்பை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் ஏற்கனவே சோப்பை உபயோகித்தவருக்கு ஏதாவது சரும நோய் இருந்திருந்தாலும் நன்றாகக் கழுவி உலர வைத்துவிட்டால் அடுத்தவர் உபயோகிக்கும்போது தொற்று ஏற்படாமல் தடுக்க ஓரளவு வாய்ப்பாகும்.
சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் கிருமிகள் போன்றவை சோப்பின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். ஆக, ஒரு சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.
நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள் உபயோகிக்கும்போது, அந்த சோப்பின் மூலம் அதிகமாக கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. வெளிக்காயம், அதிக எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்கள், ‘எக்ஸிமா’ என்று சொல்லக்கூடிய சரும நோய் உள்ளவர்களிடமிருந்து கண்டிப்பாக சருமநோய் பரவத்தான் செய்யும்.
ஒருவர் உபயோகித்த சோப்பை இன்னொருவர் உபயோகித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தால், நீங்கள் உபயோகித்த சோப்பை நன்கு கழுவி, உலரவிட்டு உபயோகிக்க வேண்டும். கணவன்-மனைவி என்றாலும் கூட இதே முறையை கடைப்பிடிப்பது நல்லது.
இப்பொழுதெல்லாம் ‘லிக்யுட் சோப்’ என்கிற திரவ வடிவ சோப்புக் கரைசல் பாட்டில்களில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தும்போது தொற்று என்கிற பேச்சுக்கே இடமில்லை.
சோப்பை நாம் உபயோகிப்பதே, நம் உடம்பை சுத்தம் செய்ய, நம் உடம்பு புத்துணர்ச்சி பெற, நம் உடம்பில் ஒட்டியிருக்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், எண்ணெய் படலம், வியர்வை நாற்றம் முதலியவற்றை அகற்றத்தான். எனவே அந்த சோப் தரமானதாக இருக்க வேண்டும்.
தோல் பராமரிப்பு என்பது, பாத்ரூமுக்கு போனவுடன் 2 சொம்பு தண்ணீரை ஊற்றி, சோப்பை உடல் முழுவதும் ஒரு நிமிடத்தில் தேய்த்துவிட்டு, தண்ணீரை மறுபடியும் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, அவசரம் அவசரமாக பாத்ரூமை விட்டு வெளியே வந்துவிடுவதல்ல. சிறிது கவனம், சிறிது அக்கறை, தரமான குளியல் சோப்புடன் சேரும்போது, அந்தக் குளியல், ஆனந்தக் குளியலாக எப்பொழுதும் இருக்கும்.
-டாக்டர் எஸ்.அமுதக்குமார்






