கல்யாண வரம் அருளும் மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி


கல்யாண வரம் அருளும் மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி
x

மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் கந்தகஷ்டி அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

சென்னை

சென்னை மடிப்பாக்கத்தில் கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். ஒரு சமயத்தில் இந்த பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள், அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில்தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

முதலில் இங்கு விநாயகர் மட்டுமே அருள்பாலித்து வந்தார். அதன்பிறகு, முருகப்பெருமானுக்கு சன்னிதி அமைத்து கோவில் கட்டினர். கோவில் நுழைவுவாசலில் கொடி மரம், மயில் வாகனம் ஆகியவை அமைந்திருக்கின்றன. கருவறையில் வள்ளி-தெய்வானை சமேதராக அருள்பாலிக்கும் கல்யாண கந்தசுவாமியை தரிசிக்க ஆறு படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இந்த ஆறு படிகளும், 'சரவணபவ' எனும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரத்தை நினைவுபடுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிகளுக்கு படி பூஜையும் நடத்தப்படுகிறது.

கோவில் பிரகாரத்திற்கு தெற்கு பகுதியில் கருணை கணபதியும், வடக்கு பகுதியில் அங்காரகனும் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெய துர்க்கையும் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். ராமர், சீதா தேவி, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் நவக்கிரகங்களுக்கும் தனிச் சன்னிதி உண்டு.

இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கு 'தில பத்ம தானம்' எனும் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. 'தில' என்றால் எள் என்றும், 'பத்ம' என்றால் தாமரை என்றும் பொருள்படும். அதாவது செவ்வாய்க்கிழமை அன்று, இத்தல அங்காரகனுக்கு எள்ளையும், தாமரையும் சமர்ப்பித்து மனமுருக வழிபாடு செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி உத்திரம் மற்றும் கந்தகஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது முருகப்பெருமான் அணிந்திருக்கும் மாலையை திருமணமாகாதவர்கள் வாங்கி அணிந்துகொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவேதான் இத்தல முருகன், 'கல்யாண கந்தசுவாமி' எனப் போற்றப்படுகிறார்.

1 More update

Next Story