ஐயப்ப பக்தர்கள் இருமுடி சுமந்து செல்வது ஏன்?

ஐயப்ப பக்தர்கள் இருமுடியில் ஒருபுறம் நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், ஒருபுறம் தங்களுக்கு தேவையான பொருட்களும் வைத்து சுமந்து செல்கிறார்கள்.
இருமுடி என்பது சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்லும் யாத்திரையின் முக்கிய அம்சம் ஆகும். இவ்வாறு, ஐயப்ப பக்தர்கள் தலையில் தாங்கி செல்லும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்துகொள்வோம்.
மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்ப சுவாமி பூவுலகில், ராஜசேகரன் மன்னனின் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார். அப்போது குலதெய்வமான சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை வழங்கினார். அவரும் அப்படியே செய்தார்.
அதே பழக்கத்தை தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள். இருமுடியில் ஒருபுறம் கோவிலுக்கான நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், ஒருபுறம் தங்களுக்கு தேவையான பொருட்களும் வைத்து சுமந்து செல்கிறார்கள். யாத்திரை முடியும்போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆலயத்தை அடைந்ததும் பதினெட்டு படிகளை கடந்து சுவாமியை தரிசனம் செய்கிறான்.
ஆண்டவனை நெருங்கும்வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை, எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகி விடுகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.






