விஷ்ணு தீபம்: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விஷ்ணு தீபம்: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மபுரி

சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சியளித்த தினத்தை திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடுகிறோம். அதுபோல மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி, உலகத்தை காத்த நாள் 'விஷ்ணு கார்த்திகை' என்று கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை பொதுவாக திருக்கார்த்திகைக்கு மறுநாள் வரும்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் மகா தீபம் ஏற்றப்படும். அடுத்த நாள் பௌர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரத்தன்று விஷ்ணு கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுகிறது. சில ஆண்டுகள் திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்றே பெளர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணையும் சமயத்தில் பாஞ்சராத்திர தீபமும் ஏற்றப்படுவது உண்டு.

அவ்வகையில் இந்த ஆண்டு விஷ்ணு கார்த்திகை அல்லது விஷ்ணு தீப விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

1 More update

Next Story