திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் தமிழில் முற்றோதல்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ராஜகோபுர பணிகள் முடிவடைந்துவிட்டன. விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8 ஆயிரம் சதுர அடியில் யாக சாலையும், 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது.
இதற்கிடையே திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடந்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். யாக பூஜையில் தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கும்பாபிஷேகத்தினத்தன்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் யாகசாலையில் 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவை தமிழில் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில நிர்வாகம் வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணிமுதல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்க உள்ளது. இதற்காக 8 ஆயிரம் சதுரடியில் 76 யாக குண்டங்களுடன் பிரமாண்ட வேள்விசாலை அமைக்கப்படுகிறது. வேள்விசாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாதஸ்வர இன்னிசை நடக்கும். மேலும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் 64 ஓதுவார்மூர்த்திகளை கொண்டு பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.