நாளை வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?


நாளை வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?
x

அதிக செலவு செய்து பொருட்களை வாங்கி பூஜை செய்ய முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்தும் மகாலட்சுமியை வழிபடலாம்.

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாள்தான் வரலட்சுமி விரத நாள். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை மேற்கொண்டு, மகாலட்சுமியை வழிபட்டால் கணவன்-மனையிடைலான மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. அவ்வகையில் இந்த ஆண்டு நாளை (8.8.2025) வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பூஜை செய்யும் முறை

அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு, விளக்கேற்றி, மகாலட்சுமியை வாசலில் இருந்து அழைத்துச் சென்று பல விதமான மந்திரங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.

பூஜைக்கான கலசத்தை மகாலட்சுமி போன்று அலங்காரம் செய்யவேண்டும். மனைப்பலகையில் கும்பம் வைத்து, கும்பத்தில் உள்ள தேங்காயில் அம்மன் முகம், கிரீடம் வைக்கவேண்டும். அத்துடன் ஆடை அணிகலன்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி அலங்கரிக்கவேண்டும். பின்னர், வீட்டின் வாசலில் வைத்து மகாலட்சுமியை அந்த கலசத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ளவேண்டும். வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பூஜைக்கான இடத்தில் அமரச் செய்யவேண்டும்.

இப்போது மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, அன்னைக்கு பூஜைகள் செய்ய வேண்டும். பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை, பாக்கு, பழம், நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் என நைவேத்யம் படைக்க வேண்டும். இதையடுத்து மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். நோன்புக் கயிறை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி, லட்சுமி அஷ்டோத்ரசதம், கனகராதா ஸ்தோத்திரம் சொல்லலாம். படிக்க தெரியாதவர்கள் வரலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டால் போதும். `மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்' என்று மனம் உருக பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

நோன்பு கயிறு

பொதுவாக, ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கைலும் நோன்பு கயிறு கட்டிக்கொள்ளவேண்டும் என்பதே வழக்கம். ஆனாலும் வரலட்சுமி பூஜை மற்றும் விரத பூஜையில் பங்கேற்கும் பெண்கள் தங்களின் வலது கையில் நோன்பு கயிறை கட்டிக்கொள்ளவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

சுமங்கலி பெண்கள் வரலட்சுமி பூஜைக்காக நோன்பு சரடை தயார் செய்யவேண்டும். இதற்கு, ஒரு வெள்ளை நூல்கண்டு எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒன்பது நூல்களாக சரி சமமாக சரடாக கத்தரித்து திரியாக திரித்து மஞ்சள் தடவி, அதில் ஒன்பது முடிச்சுகள் போட்டுக் கொள்ளவேண்டும். பூஜையில் எத்தனை பெண்கள் பங்கேற்கிறார்களோ அத்தனை நோன்பு கயிறு தயார் செய்து கொள்ளவேண்டும். நடுநடுவே உதிரிப் பூக்களை வைத்துக் கட்டிக்கொள்ளவேண்டும். இந்த சரடுகளை பூஜையில் வைக்கவேண்டும். பூஜை நிறைவடைந்ததும் அந்த கயிறானது, மகாலட்சுமியின் பிரசாதமாக மாறிவிடுகிறது.

ஒரு சிலர் சிவப்பு நூலில் பஞ்சுபோல் இருக்கும் பிரத்தியேக நோன்பு கயிறு வாங்கி வைத்து பூஜை செய்வார்கள். அவற்றை கைகளில் கட்டிக் கொள்ளலாம். ஆனால் மேற்குறிப்பிட்டபடி முறைப்படி தயாரிக்கும் நோன்பு கயிறை சுமங்கலி பெண்கள், பூஜை முடிந்ததும் கழுத்தில் கட்டிக் கொள்வது நல்லது. திருமணம் ஆகாத பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அருகில் இருக்கும் பெண்கள், உறவினர் அல்லது தெரிந்த சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து கொண்டாடுவது மிகுந்த பலனை தரும். பூஜையின் முடிவில் அவர்களுக்கு நைவேத்ய பிரசாதம் கொடுத்து சாப்பிட செய்ய வேண்டும். பின்னர் ரவிக்கைத் துணி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு ஆகியவற்றை வழங்கவேண்டும்.

எளிய முறையில் பூஜை

வரலட்சுமி அன்று கலசம் அமைத்து அம்மனின் முகம் வைத்து வழிபடுவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் எளிமையாக தாமிரம் அல்லது செம்பினால் ஆன சொம்பினை பயன்படுத்தி கலசம் அமைக்கலாம். இதற்கு அம்மன் முகம் இல்லை என்றால் வெறும் தேங்காயில் மஞ்சள் பூசி, அதில் குங்கும திலகம் இட்டு வைத்து வழிபடலாம். கலசம் அமைக்கவும் முடியாது என்பவர்கள் மகாலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். மகாலட்சுமியின் படமும் இல்லை என்பவர்கள், ஒரு சிறிய அகலில் தீபம் ஏற்றி வைத்து, அதை மகாலட்சுமியாக பாவித்து வழிபடலாம்.

விலை உயர்ந்த பொருட்களை எதுவும் வாங்க முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, 2 வாழைப்பழம் வைத்தும் வழிபடலாம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், மற்ற வீடுகளில் நடக்கும் பூஜையில் பங்கேற்று அன்னையின் அருள் பெறலாம்.

1 More update

Next Story