வந்தவாசி: ஆரியாத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் ஆரியாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவரசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, கோபுர கலச பிரதிஷ்டை, பிரவேசபலி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாடி சந்தானம், தத்வார்ச்சனை, வேதபாராயணம், மகா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஆரியாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






