திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்


திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்
x

உயர் பொறுப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.

முதல் 3 நாட்களுக்கு 1+3 குடும்ப ஒதுக்கீட்டின் கீழ் டோக்கன்கள் ஒதுக்கப்படும், இதில் நான்கு உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (நவம்பர் 27-ந் தேதி) தொடங்குகிறது.

பக்தர்கள் நாளை காலை 10 மணி முதல் டிசம்பர் 1-ந் தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான வலைத்தளம், தேவஸ்தான மொபைல் செயலி அல்லது அரசு வாட்ஸ்அப் பாட் (9552300009) வழியாக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் டிக்கெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

மீதமுள்ள நாட்களுக்கான தரிசன அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனை விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சர்வ தரிசனத்திற்கு, சாதாரண பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகம் 2 மூலம் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனத்தைப் பெறலாம்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் (ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை), ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் என வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதேபோல் ரூ.300 கட்டண தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள், டிசம்பர் 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

உயர் பொறுப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story