உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் ஆரம்பம்

தைப்பூச திருவிழாவில், ஜனவரி 31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி தங்க தேரில் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (24.1.2026) தொடங்குகிறது நாளை மறுநாள் காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. காலை 5.30 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமும் தொடர்ந்து 7 மணிக்கு கொடி ஏற்றுதலும் நடக்கிறது.
தைப்பூச திருவிழா பிப்ரவரி 2ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை காலை 7 மணிக்கு விநாயகர் வீதி உலா வருதலும், 11.30 மணிக்கு உச்சகால பூஜையும், 12 மணிக்கு அன்னதானமும் இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலா வரதலும், அதனைத் தொடர்ந்து சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
முதல் நாள் இரவு 8 மணிக்கு சுவாமி இந்திர வாகனத்தில் வீதி உலாவருதலும், 25ஆம் தேதி கஜ வாகனத்திலும் 26 ஆம் தேதி அன்ன வாகனத்திலும், 27 ஆம் தேதி கைலாய பர்வதம் வாகனத்திலும், 28ஆம் தேதி காமதேனு வாகனத்திலும், 29ஆம் தேதி குதிரை வாகனத்திலும், 30ஆம் தேதி சட்டங்கால் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வருதலும், 31ஆம் தேதி சட்டங்கால் சப்பரத்தில் பச்சை சாத்தி சுவாமி வீதி உலா வருதலும் நடக்க உள்ளது.
31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி தங்க தேரில் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருதலும், பிப்ரவரி 1ஆம் தேதி காலை 7.00 மணிக்கு பெரிய தேரோட்டமும் நடக்க உள்ளது. இரவு 11 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழா நடக்க உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு உவரி சுயம்புலிங்க சுவாமி அன்னதான சேவா அறக்கட்டளை சார்பில் காலை முதல் அன்னதானம் நடக்க உள்ளது.






