மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று கிரிவலம்


மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று கிரிவலம்
x

2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்றனர்.

மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) வரையில் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும். கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ஆண்டுக்கு 2 முறை நடைபெறும்.

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளிலும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் திருவூடல் முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வருகிறார். அப்போது கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story