திருவண்ணாமலை தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

சுவாமி வீதியுலா வந்தபோது மாட வீதிகளில் உள்ள பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாட வீதியில் பவனி வந்தனர். இரவு 10.30 மணி அளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க சாமி வீதி உலா நடந்தது. அப்போது மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சின்ன அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 2-ம் நாளான இன்று காலை 10.30 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அருணாசலேஸ்வரரின் திருவடிவான சந்திரசேகரர் அம்பாளுடன் தங்க சூரிய பிரபை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
முன்னதாக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகர் முன்னே செல்ல அதன்பின்னர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் கோவில் மாட வீதியை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாட வீதிகளில் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாட வீதியில் உள்ள பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.






