திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக ஒரே நாளில் 4.60 லட்சம் பேர் முன்பதிவு

முன்பதிவு செயல்முறை டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர உள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் வழியாகச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் தொடங்கியது.
சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே பக்தர்கள் ‘இ-டிப்' எனப்படும் மின்னணு குலுக்கல் முறைக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் 2.16 லட்சம் பக்தர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். மாலைக்குள் பக்தர்களின் எண்ணிக்கை 4.60 லட்சமாக அதிகரித்தது.
இந்த முன்பதிவு செயல்முறை டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர உள்ளது. இதனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2-ந்தேதி இ-டிப்பில் டோக்கன் பெறும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தனியாக தொலைப்பேசி மூலம் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பும்.
குறுஞ்செய்தியை பெறும் பக்தர்கள் டிசம்பர் 30-ந்தேதி முதல் தொடங்கும், முதல் 3 நாட்களுக்கு சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம். சொர்க்கவாசல் தரிசனம் இல்லாத மற்ற 7 நாட்களுக்கு டோக்கன்கள் இல்லாத அனைத்துப் பக்தர்களுக்கும் இலவச தரிசனம் அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






