தொண்டாமுத்தூர்: ஓனாப்பாளையம் மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மாதேஸ்வரருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓனாப்பாளையம், ஜீவா வீதியில் மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்து விமானம் மற்றும் மாதேஸ்வரர், பால விநாயகர், பாலமுருகன், காலபைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 21ம் தேதி, மாலை 5 மணிக்கு மகாலட்சுமி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
மறுநாள் காலை வாஸ்து சாந்தி ஹோமம், மூலவர் அபிஷேகம் நடத்தப்பட்டு, எண்வகை மருந்து சாத்துதல் நடந்தது. பின்னர், மாலை யாகசாலை பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று காலையில் யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை செய்யப்பட்டு, கலச புறப்பாடு நடந்தது.
பின்னர், காலை 10.15 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மாதேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் மாதேஸ்வரருக்கு, மகா அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






