திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
x

விழா நாட்களில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மதுரை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று (19-1-2026) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பைப்புல், மாவிலை, சந்தனம், குங்குமம், பூமாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து 6.45 மணிக்கு மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

தொடர்ந்து 28-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 27-ந் தேதி தை கார்த்திகை தினத்தில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 16 கால்மண்டப வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய ரத வீதிகளில் தேரோட்டமும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந் தேதி ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை தெப்ப மிதவையில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பகுளத்தில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.

அன்று மாலை தெப்பக்குளத்தில் மைய மண்டபத்தில் பத்தி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து மின்னொளியில் மீண்டும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தெப்பக்குளத்தில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

1 More update

Next Story