பெருமாள் கோவில்களில் தனியாக நவக்கிரக சன்னதி ஏன் இல்லை?


பெருமாள் கோவில்களில் தனியாக நவக்கிரக சன்னதி ஏன் இல்லை?
x

கிரகங்கள் பெருமாளை ஆட்சி செய்யவில்லை, பெருமாளே கிரகங்களை ஆட்சி செய்கிறார்.

பெருமாள் தனது வாமன அவதாரத்தில் மூன்று அடிகளில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் மட்டுமல்ல… அண்ட சராசரங்களையும் அளந்தவர். அப்படியானால், அந்த அண்டங்களில் இருக்கும் நவகிரகங்களும், லோகங்களும், காலமும், கர்மமும் எல்லாம் பெருமாளுக்குள் அடங்கியவையே. அதனால்தான் வைணவ மரபில், “பெருமாளை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்” என்று தொன்று தொட்டு நம்பப்படுகிறது. அப்படி இருக்க, தனியாக நவக்கிரக சன்னதி தேவை இல்லை என்பதே வைணவ சித்தாந்தம்.

நவக்கிரக சக்திகள்

வைணவர்களின் பார்வையில் — எல்லாமே பெருமாள்தான். வைணவர்களைப் பொறுத்தவரை, உயர்ந்தவன் ஒருவனே — நாராயணன். அதனால் தான், பெருமாளின் அவதாரங்களே நவக்கிரக சக்திகளாக விளங்குகின்றன:

ராம அவதாரம் — சூரியன்

கிருஷ்ண அவதாரம் — சந்திரன்

நரசிம்ம அவதாரம் — செவ்வாய்

கல்கி அவதாரம் — புதன்

வாமன அவதாரம் — குரு

பரசுராம அவதாரம் — சுக்கிரன்

கூர்ம அவதாரம் — சனி

வராக அவதாரம் — ராகு

மச்ச அவதாரம் — கேது

இதன் பொருள், கிரகங்கள் பெருமாளை ஆட்சி செய்யவில்லை… பெருமாளே கிரகங்களை ஆட்சி செய்கிறார் என்பதாகும். பெருமாளை வணங்கினாலே நவக்கிரகங்களையும் வணங்கியதற்குச் சமம் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் தனியாக சன்னதிகள் அமைக்கப்படுவதில்லை.

நவதிருப்பதிகள் - நவகிரகத் தலங்களே!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகள், நவகிரக தலங்களாகவே போற்றப்படுகின்றன:

ஸ்ரீவைகுண்டம் — சூரியன்

வரகுணமங்கை — சந்திரன்

திருக்கோளூர் — செவ்வாய்

திருப்புளியங்குடி — புதன்

ஆழ்வார்திருநகரி — குரு

தென்திருப்பேரை — சுக்ரன்

பெருங்குளம் — சனி

இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) — ராகு

இரட்டை திருப்பதி (அரவிந்த லோசனர்) — கேது

இதன் மூலம், நவகிரகங்களும் நாராயணனின் அருளுக்குள் தான் என்பது தெளிவாகிறது. நவகிரகங்கள் தனியாக இல்லாதது குறை அல்ல… அது பெருமாளின் பரிபூரணத்திற்கான சான்று. அனைத்துமாகி நிற்பவனே நாராயணன். அவனுள் அடங்காதது எதுவும் இல்லை. அதனால்தான் பண்டைய பாரம்பரிய பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதி தனியாக இருப்பதில்லை. பிற்காலத்தில் ஒரு சில பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதிகள் அமையப்பெற்றன.

1 More update

Next Story