ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமை

ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்த ஜனமேஜயன், ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தான்.
நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக சந்ததியினரை வெகுவாக தாக்கக் கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது. ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால், முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது...
குருஷேத்திர போரில் பாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ண பகவான், பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார். போர் முடிந்த நாளில் பாண்டவர்களின் வெற்றியை பொறுக்காத அஸ்வத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவி உத்தரையின் கருவில் இருந்த சிசுவை கொல்ல முயன்றான். ஆனால் பகவான் கிருஷ்ணர் அந்த குழந்தையை காப்பாற்றினார். அந்த குழந்தைதான் தர்மருக்கு பிறகு அஸ்தினாபுரத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பரீட்சித்து மகாராஜா.
நீதி தவறாமல் ஆட்சி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பரீட்சித்து, ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சென்றபோது, ஒரு மான் மீது அம்பை எய்தான். ஆனால் அடிபட்ட மான் தப்பி சென்றுவிட்டது. மானைத் தேடி களைத்துப்போன பரீட்சித்து, ஒரு முனிவரின் கூடாரத்தை அடைந்தான். அங்கு தியான நிஷ்டையில் இருந்த முனிவரை வணங்கி, மானைப் பற்றி கேட்டபோது அவர் எந்த பதிலும் கூறாமல் தியானத்திலேயே ஆழ்ந்திருந்தார். இதனால் கடும் கோபமடைந்த பரீட்சித்து, முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டுவிட்டு அரண்மனைக்கு திரும்பினான். இதை அறிந்த முனிவரின் மகன் சிருங்கி, தன் தந்தையை அவமதித்த மன்னர் பரீசித்துக்கு மரண சாபமிட்டான். அதாவது, ‘இன்னும் ஏழு நாளில் கொடிய விஷம் கொண்ட தட்சகன் என்ற பாம்பு கடித்து இறப்பான்’ என மன்னனை சபித்தான்.
தவவலிமை மிக்க முனி குமாரனான சிருங்கியின் சாபத்தை அறிந்து பயந்துபோன பரீட்சித்து மன்னன், தட்சகன் தன்னை நெருங்க முடியாதபடி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டான். ஆனால் விதி யாரை விட்டது? சிருங்கி முனிவர் சொன்ன காலக்கெடு முடியும் ஏழாவது நாளில், பழத்திற்குள் புழு உருவில் அரண்மனைக்குள் வந்த தட்சகன், பரீட்சித்து மன்னனை கொன்றான்.
அதேசமயம், முனி குமாரனின் சாபம் நம்மை விடாது என்பதை அறிந்திருந்த பரீட்சித்து, தன் வாழ்வின் கடைசி ஏழு நாட்களிலும் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிந்து மரண பயத்தை போக்கினான்.
பாம்பினத்தின் இளவரசனான தட்சகன், பரீட்சித்து மகாராஜாவை கொன்றதால் வெகுண்டெழுந்த அவரது மகன் ஜனமேஜயன் பாம்பினத்தையே ஒழிக்க சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான். ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. இதனால் அவன் கடும் ஏமாற்றம் அடைந்தான்.
'என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசு பாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்ப யாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது? என் தந்தையின் ஆத்மாவை எப்படிக் கரையேற்றுவது?’ என்று தவித்தான் ஜனமேஜயன்.
அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன், தேவி பாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கின. சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தான். உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் ஒலித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
எனவே, முன்னோர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும், பாவ தோஷத்திற்கு ஆளாகியிருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பது ஐதீகம்.