திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை கொடியேற்றம்

திருவிழா தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை(திங்கட்கிழமை) காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 27-ந்தேதி தெப்பக்குளத்தில் காலை 7.50 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், நகரின் முக்கிய ரதவீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக 28-ந் தேதி காலை 9.40 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தெப்பமிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் அமர்ந்து தெப்பகுளத்தை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் இரவு 7 மணியளவில் மின்னொளியில் மீண்டும் தெப்பக்குளத்தில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து தங்க குதிரையில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து சன்னதி தெருவில் சொக்கநாதர்கோவில் முன்பு சூரசம்ஹார லீலை நடக்கிறது. 10 நாட்களும் காலை, இரவு ஆகிய இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி தெப்ப மிதவை வலம் வருவதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. தெப்பக்குளத்தின் மேல்புறத்தில் உள்ள ஆழ்துளைகிணற்றில் இருந்து மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை எடுத்து தெப்பக்குளத்தை நிரம்பும் பணி நடந்து வருகிறது.






