சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்


சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்
x

பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்குவது, தபசுமலை முருகன் கோவிலின் தனிச் சிறப்பாகும்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை எனும் ஊரில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது, தபசுமலை பால தண்டாயுதபாணி கோவில். சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு 'தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பால தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவர் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர்.

ஒரு காலத்தில் இங்கு முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த இடத்திலேயே முருகப்பெருமானுக்கு விக்ரகம் அமைத்து பிரதிஷ்டை செய்து, பின்பு கோவில் எழுப்பி மக்கள் வழிபட தொடங்கினர்.

மலை அடிவாரத்தில் சப்த ரிஷிகளின் சிலைகளும், பீடமும் அமைந்துள்ளன. இந்த பீடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. கோவிலை அடைய, 75 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய் போன்றவை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது.

கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரிந்த தம்பதியரை ஒன்றுசேர்க்கும் தலமாகவும் திகழ்கிறது. மன வேற்றுமையால் பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி இந்த தலத்திற்கு வந்து மனமுருகி முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டால், கருத்து வேறுபாடுகள் அகன்று தம்பதியர் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தபசுமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story