திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி


திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி
x

அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தங்கத்தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் மாலை 6 மணியளவில் கிரி பிரகாரத்தில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால், திருச்செந்தூர் கோவில் பெருந்திட்ட வளாக பணிகளின் ஒரு பகுதியாக கோவில் கிரிபிரகாரத்தில் தரைத்தள மேம்பாட்டு பணிகள் நடைபெற்றதால் கடந்த 17.7.2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று முதல் மீண்டும் தங்கத்தேர் பவனி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கத்தேர் பவனியை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர். தங்கத்தேர் கிரிபிரகாரத்தில் பவனி வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பழனி, கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story