சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்காக புல்லு மேட்டுப்பாதையில் சிறப்பு ஏற்பாடுகள்


சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்காக புல்லு மேட்டுப்பாதையில் சிறப்பு ஏற்பாடுகள்
x

பக்தர்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் மூலமாக நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளுக்கு வந்து, அங்கிருந்து மலையேறி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். அதே போல் பெரும்பாதை வழியாகவும், புல்லு மேட்டுப்பாதை வழியாகவும் சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

இதில் புல்லு மேட்டுப்பாதையில் வண்டிப்பெரியாரில் இருந்து சத்திரம் வரை 6 கிலோ மீட்டரும், சத்திரத்தில் இருந்து சன்னிதானத்திற்கு 6 கிலோ மீட்டரும் செல்ல வேண்டும். குறிப்பாக சத்திரத்தில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையானது வன விலங்குகள் அதிகம் இருக்கக் கூடிய கானக பாதையாகும்.

இந்த நிலையில், நடப்பாண்டு சபரிமலை சீசனை முன்னிட்டு புல்லு மேட்டுப்பாதை வழியாக அய்யப்ப பக்தர்கள் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காட்டுப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அய்யப்ப பக்தர்களுக்காக சத்திரத்தில் குடிநீர், கழிப்பறைகள், மருத்துவ உதவி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் புல்லு மேட்டுப்பாதை வழியாக பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக அளவிலான பக்தர்கள் புல்லு மேட்டுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story