சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா


சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
x

விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி, காய்கறிகள் ஆகியவற்றை தோரணமாக தேரில் கட்டி அலங்கரித்திருந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 12-ம் தேதி திங்கள் கிழமை ஐயனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் செல்லியம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 5-ம் நாள் படைத் தேர் திருவிழாவும். 7-ம் நாள் மாதிரி தேரோட்டமும் நடைபெற்றது.

கிராம மக்களால் தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி, காய்கறிகள் ஆகியவற்றை தோரணமாக தேரில் கட்டி அலங்கரித்தனர். வரும் ஆண்டுகளிலும் விவசாயம் செழிக்க வேண்டி இவ்வாறு அலங்காரம் செய்தனர்.

தேர் கட்டும் பணிகள் நிறைவடைந்து, இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மனும் மாரியம்மனும் எழுந்தருள, காத்தவராயன் தேரோடும் வீதிகளில் வெள்ளோட்டம் சென்று வீதிகளை ஆய்வு செய்து விட்டு கோவிலுக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து கடா பலி கொடுக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலையில் தொடங்கிய தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் ஏராளமான ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தனர். பெண்கள் நடை கும்பிடு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

1 More update

Next Story