சபரிமலை போக முடியவில்லையா..? சுவாமி அய்யப்பன் அருள் பெற இந்த எளிய பூஜை போதும்


சபரிமலை போக முடியவில்லையா..? சுவாமி அய்யப்பன் அருள் பெற இந்த எளிய பூஜை போதும்
x

பூஜையை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கவேண்டும்.

கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, கடுமையான விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்வதே பெரும் பாக்கியம் என்று சொல்லலாம். சபரிமலை சுவாமி அய்யப்பனை நினைத்த போதெல்லாம் தரிசனம் செய்ய முடியாது. அவரை தரிசனம் செய்வதற்கென கடுமையான விதிமுறைகளும் நேரமும் உண்டு.

இந்த இருமுடி வழிபாட்டை அனைவராலும் செய்ய முடியாது. சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் அய்யப்பனை வீட்டிலிருந்தபடியே கார்த்திகை மாதத்தில் எளிதாக வழிபடலாம்.

இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாடு செய்வதற்கான காலம் காலை பிரம்ம முகூர்த்த வேளை ஆகும். இந்த வழிபாடு செய்வதற்கு அய்யப்பன் திருவுருவப்படம் தேவை. படம் இல்லை என்றால் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தையே அய்யப்பனாக பாவித்து வணங்கலாம்.

இந்த வழிபாட்டிற்கு ஏழு மண் அகல் விளக்குகள், வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் மற்றும் பூஜை பொருட்கள் தேவை. அகல் விளக்குகளில் பஞ்சு திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மூன்று சிறிய கிண்ணங்களை எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு கிண்ணத்தில் நெய், மற்றொரு கிண்ணத்தில் மூன்று பழங்களை வைக்கவேண்டும். அது அவரவர்க்கு விருப்பமான எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொரு கிண்ணத்தில் நைவேத்தியமாக தேங்காய் சாதம் செய்து வைக்கவேண்டும்.

பூஜை அறையில் வாழை இலை போட்டு அதில் முழுவதுமாக பச்சரிசியை மஞ்சள் கலந்து பரப்பவேண்டும்.

அதை சுற்றி நைவேத்தியத்தை வைக்கவேண்டும். அதன் பிறகு ஏழு அகல் விளக்கை பச்சரிசியை பார்த்தவாறு சுற்றி வைத்து ஏற்றி பூஜை செய்யவேண்டும். சரண கோஷம் எழுப்பி சுவாமி அய்யப்பனுக்கு தீப தூப ஆராதனை காட்டி வணங்கவேண்டும். பூஜையின்போது‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற சரண கோஷத்தை 108 முறை உச்சரிப்பது சிறந்தது.

பூஜையை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கவேண்டும். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் நைவேத்தியங்களை உண்ணலாம்.

அய்யப்பனை நினைத்து செய்யப்படும் இந்த எளிய வழிபாடு, பக்தர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பது நம்பிக்கை.

1 More update

Next Story