ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சத கலசாபிஷேகம்


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சத கலசாபிஷேகம்
x

கடந்த 10 நாட்களாக அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்வ இலைகள், குங்குமம் ஆகியவை சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் லட்ச வில்வார்ச்சனை, லட்ச குங்குமார்ச்சனை நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது.

நிறைவுநாள் நிகழ்ச்சியான நேற்று காலை கோவில் வளாகத்தில் உள்ள தங்கக்கொடி மரம் எதிரில் அஷ்டோத்ர சத கலசாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை அலங்கரித்து கொடிமரம் எதிரே எழுந்தருளச் செய்தனர். அப்போது வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஹோமம் வளர்த்து, பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்து பூஜைகள் முடிந்ததும் கடந்த 10 நாட்களாக லட்ச வில்வார்ச்சனையிலும், குங்குமார்ச்சனையிலும் பயன்படுத்திய வில்வ இலைகள், குங்குமத்தை கோவில் வேதப் பண்டிதர்கள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய்பிரசாத் தம்பதியர், செயல் அலுவலர் பாபிரெட்டி தம்பதியர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கூடைகளில் சேகரித்து, கோவிலில் இருந்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ஆற்றின் கரையில் பூஜைகள் நடத்தி சொர்ணமுகி ஆற்றில் வில்வ இலைகள், குங்குமத்தை கரைத்தனர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story