திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் 3 நாட்கள் நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரே நாளில் சூரியப்பிரபை வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விட்ச வாகனம், சர்வபூபால வாகனம், சந்திரபிரபை வாகனம் ஆகிய 7 வாகனங்களில் மலையப்ப சாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், ரத சப்தமி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. 14 வகையான அன்னப்பிரசாதம் காலை முதல் இரவு வரை 85 உணவு கவுண்ட்டர்களில் வினியோகம் செய்யப்படும் என்றார். ரத சப்தமியையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள், குழந்தைகள் பெற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது. வி.ஐ.பி. தரிசனத்தை தவிர, அனைத்து பரிந்துரை கடிதங்களும் நாளை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






