நாளை சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு


நாளை சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
x

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது.

விநாயகர் அவதரித்தது சதுர்த்தி திதியில் என்பதால் ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதிகள் அனைத்தும் விநாயகரை வழிபடுவதற்கான உகந்த தினம் ஆகும். இதில், தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். 'சங்கட' என்றால் துன்பம், 'ஹர' என்றால் அழித்தல். அதாவது, அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடிய விரத தினமே சங்கடஹர சதுர்த்தி. இதனால்தான் பெரும்பாலான பக்தர்கள் வளர்பிறை சதுர்த்தியை விட, தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது வழக்கம்.

சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் சந்திர உதயத்திற்கு பிறகு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு, சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்தால், எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது விநாயகர் அருளால் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

இந்த மாதம் நாளை (8.11.2025) சங்கடஹர சதுர்த்தி நாளாகும். நாளை மதியம் 12.33 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி திதி ஆரம்பிக்கிறது. இந்த திதியானது மறுநாள் (9.11.2025) காலை 10.25 வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்தி திதிக்கு உகந்தது என்பதால், நாளை மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நோய்கள், காரியத் தடைகள், கடன் தொல்லை உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. விநாயகருக்கு விருப்பமான மோதகம் படைத்தும், சிதறு தேங்காய் உடைத்தும் விநாயகரை வழிபடலாம்.

1 More update

Next Story