பண்ருட்டி அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் அண்ணங்காரங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள அண்ணங்காரங்குப்பம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 24-ந் தேதி திங்கள் கிழமை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மறுநாள் யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை சிறப்பு பூஜைகள், சோம பூஜை, கும்ப அலங்காரம் செய்யப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், மேளதாள இசை வாத்தியங்கள் வாண வேடிக்கையுடன் முளைப்பாரி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, காலை 9.30 மணி அளவில் யாத்ராதானம் கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காடாம்புலியூர் காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.






