திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 4 டன் மலர்களால் புஷ்ப யாகம்

புஷ்ப யாகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மலர்களில் 2 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கியதாகும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 17-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவின்போது கோவிலில் நடத்தப்பட்ட தினசரி கைங்கர்யங்கள், வாகனச் சேவைகளில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு வேத மந்திரங்கள் ஓத சாஸ்திர முறைப்படி மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பல்வேறு மலர்கள், இலைகள் நிரப்பப்பட்ட கூடைகளை அதிகாரிகள், பக்தர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
புஷ்ப யாகத்தில் சாமந்தி, சம்பங்கி, அரளி, ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், தாமரை, அல்லி, தாழம்பூ, மானு சம்பங்கி, செண்டுமல்லி, ஜாதிமல்லி, பவழ மல்லி என 14 வகையான மலர்கள் மற்றும் மரு, தவனம், வில்வம், துளசி, கதிர்பச்சை உள்ளிட்ட 6 வகையான இலைகள் என மொத்தம் 4 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டன.
அதில், 2 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், ஒரு டன் மலர்கள் கர்நாடகத்தில் இருந்தும், ஒரு டன் மலர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.
புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு, உதவி அதிகாரி தேவராஜுலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






