ஜெபமே ஜெயம்: “நீங்கள் உயர்வடைவீர்கள்”


ஜெபமே ஜெயம்: “நீங்கள் உயர்வடைவீர்கள்”
x

சிறையில் இருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே தீர்க்கதரிசி எசேக்கியேலுக்கு உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும் தரிசனம் காட்டப்பட்டது.

தீர்க்கதரிசிக்கு தரிசனம் கொடுத்து மக்களுக்கு தெம்பூட்டிய கர்த்தரின் மகிமை குறித்து வேதாகமத்தில் உள்ள தகவல் வருமாறு:-

எசேக்கியேல் என்ற வல்லமையான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். கர்த்தர் ஒருநாள் தரிசனத்தில் எசேக்கியேலை ஒரு சமவெளி நிலத்தில் கொண்டுபோய் விட்டார். அந்த சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, சிதறிக்கிடந்த அந்த எலும்புகளைச் சுற்றி நடக்கும்படி எசேக்கியேலிடம் கர்த்தர் சொன்னார்.

அவர் அப்படி நடந்தபோது, இரண்டு விஷயங்கள் அவருக்குப் பளிச்சென்று தெரிந்தன. ஒன்று, அந்த எலும்புகளின் எண்ணிக்கை; மற்றொன்று, அவற்றின் நிலைமை. அவை, “ஏராளமாக” இருப்பதையும் 'மிகவும் காய்ந்துபோய்' கிடப்பதையும் அவர் பார்த்தார்.

பிறகு, அந்த எலும்புகளைப் படிப்படியாக உயிர் பெற வைக்கும் இரண்டு கட்டளைகளை எசேக்கியேலுக்கு கர்த்தர் கொடுத்தார். இந்த எலும்புகள் யாவும் யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் எலும்புகள். அந்த திரளான எலும்புகளைப் பார்த்து ‘உயிர் அடையுங்கள்' என்று சொல், என்பதுதான் முதல் கட்டளை.

எசேக்கியேல் தீர்க்க தரிசனம் சொன்னதுமே, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவை ஒன்றோடு ஒன்று இணைந்தன. அதன் பிறகு தசை நாண்களும், சதைகளும் அவற்றை மூடின. வெளிப்புறமாக தோல் அவற்றைப் போர்த்தியது. அந்த உடல்கள் மேல் வீசும்படி, ஆவியைப் பார்த்து “தீர்க்க தரிசனம் சொல்” என்பது தான் இரண்டாவது கட்டளை.

எசேக்கியேல் அப்படிச் சொன்னதும், காற்று நான்கு திசைகளில் இருந்து வந்து, மாண்ட இவர்கள் மீண்டும் உயிரடையும்படிக்கு, இவர்கள் உடம்பில் பிரவேசித்தது. அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

இந்த தரிசனம் நடக்கும்போது இஸ்ரேல் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனில் இருந்தார்கள். 'எருசலேம் அழிக்கப்பட்டு விட்டது' என்ற செய்தியை கேட்டபோது அவர்கள் நம்பிக்கையற்று, பெலனிழந்து, கடுமையான சோர்வுடன் காணப்பட்டார்கள்.

“எங்களுடைய எலும்புகள் காய்ந்து உலர்ந்து விட்டன. எங்களுக்கு நம்பிக்கையற்று விட்டது' என்று புலம்பினார்கள்.

ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக கர்த்தர் ஒரு செய்தியைச் சொன்னார். காய்ந்து போன எலும்புகள் பற்றிய இந்தத் தரிசனத்தில் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி அடங்கியிருந்தது. சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு மீண்டும் பெலன், நம்பிக்கை கொடுப்பதாக கர்த்தர் உறுதி அளித்தார். அவர்களைத் திரும்பவும் எருசலேமுக்கு கொண்டுவந்து, அங்கே வாழ வைப்பதாக அவர் வாக்களித்தார். சோர்ந்து போயிருந்த மக்களுக்கு அந்த வார்த்தைகள் எவ்வளவு தெம்பளித்திருக்கும்!

“என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இஸ்ரவேல் மக்களிடம் சொல்" என்றார். “கர்த்தராகிய நானே இதைச் சொன்னேன், நானே இதை நிறைவேற்றுவேன்” என்று சொன்னார்.

அந்தக்காலத்தில், சிறையிருப்பில் இருந்த எல்லோருமே, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த எலும்புகளைப் போலவே மன ரீதியாக இறந்த நிலையிலே இருந்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே எசேக்கியேலுக்கு உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும் தரிசனம் காட்டப்பட்டது.

இவ்வாறு வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அன்பானவர்களே, இன்றைக்கு நாமும் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு காரியத்தில் நம்பிக்கையற்று, பெலனற்று, தனிமையில் சோர்ந்து போய் இருக்கிறோமா? நமக்கு வர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் அல்லது கடனாகக் கொடுத்த ரூபாய் வராமல் வேதனைப்படுகிறோமா? அல்லது குறிப்பிட்ட நோய் நிலையில் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு வேதனையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு இருக்கிறோமா? அல்லது தொடர் தோல்வியால் துவண்டு போய் இருக்கிறோமா? அல்லது கடன் பிரச்சினைகளால் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறோமா? திருமணம், வாரிசுக்காக நெடுநாட்களாக காத்திருக்கிறோமா?

கவலைப்படாதீர்கள், வேதம் சொல்கிறது: “நெடு நாட்களாக காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும், விரும்பினது வரும் போதோ ஜீவ விருட்சம் போலிருக்கும்”.

ஆம் பிரியமானவர்களே, நாம் ஒன்றிற்காக காத்திருக்கும்போது தான் அதன் வலி என்னவென்று புரியும். ஆகவே நாம் கவலைப்படும் விஷயங்களை, காத்திருக்கும் காரியங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் துதியோடும், புகழ்ச்சியோடும், நம் ஜெப வேளையில் தெரிவித்து, வேண்டுதல் செய்தால், நாம் வேண்டிக் கொள்ளும் காரியங்களில் தெய்வீக சமாதானத்தை தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

-டாக்டர் ஒய். ஆர். மானெக்க்ஷா, நெல்லை.

1 More update

Next Story